Friday 29 April 2016

பயம்!


மனிதர்கள் எப்பவும் மாறிகிட்டேத்தான் இருக்காங்க. இந்த மாறுதலை நிர்வாகம் செய்யும் ஒரு முக்கிய உணர்ச்சி பயம். பயம் எல்லாராலேயும் ஒரு எதிர்மறை சமாசாரமாத்தான் பார்க்கப்படுது. அதைப்பத்தி பேசக்கூட சிலருக்கு பயம்!
கவலைன்னு சொல்லலாம்; சந்தேகம்ன்னு சொல்லலாம் அல்லது தீர்வு காணப்படாத இடர் காரணிகள்ன்னு ஒண்ணும் புரியாதபடிக்குச் சொல்லலாம். எல்லாமே பயத்தின் பல வேறு ரூபங்கள்தான்.
சிலர் இந்த பயத்தை காரணமில்லாத பலவீனம் என்று நினைக்கிறாங்க. ஆனால் பயத்தை அடையாளம் கண்டுகொண்டு அதை புரிந்து கொள்வது மாறுதலை நிர்வகிக்கும் ஒரு பலமான வழி!
கற்கால மனிதரை நினைத்துப்பார்ப்போம். இரண்டு பேர் தடியை தூக்கிக்கொண்டு வேட்டையாட போகிறார்கள். ஒத்தர் சொல்றார்யாரும் போகாத இடத்துக்குப்போகலாம்; நிறைய வேட்டை கிடைக்கும்.” மத்தவர் சொல்றார்யப்பா, பயமா இருக்கு. அங்க டைனோசார் இருக்குன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.”
ரெண்டு பேருமே ரைட்டா இருக்கலாம், இல்லே?
(நம்மோட மூளை ரெண்டு பக்க வாதத்தையும் கேட்டு முடிவு செய்ய ட்யூன் ஆகி இருக்கு!)
காலம் காலமா உயிர் பிழைக்கறதுக்காக  நம்மோட மூளை ரெண்டாவதா சொல்ற கொஞ்சம் ஜாக்கிரதையா இருப்போம்என்கிறதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கு! ஒரு ரிஸ்க் எடுக்கலாம் என்கிறதுக்கு இது ஒரு தடையை போடும். அதுவும் உயிர் பிழைக்கிற வழிதான்!
 இந்த தடைதான் பயம்.
மாறுதல் என்கிறதுல முக்கிய விஷயம் அந்த மாற்றமே இல்ல. யாருக்கும் அடுத்த என்ன நடக்கும் என்பதே தெரியாது என்கிறதே முக்கிய விஷயம். மாறுதல் என்கிறது அடிப்படையில தெரிஞ்ச விஷயத்தில இருந்து தெரியாத விஷயத்துக்குப் போகிறதுதான். அது, இது வரை யாரும் போகாத காட்டுக்குள்ள போவது… வேட்டை கிடைச்சாலும் கிடைக்கும்; அல்லது டைனோசார் தாக்கினாலும் தாக்கும்!
பயம் கெட்டதா?
பயம் என்கிறது யாருக்கும் பிடிக்கிறதில்லை. அது ஒத்தரை நிலை குலையச்செய்யுது! அதனால அது மோசமானதா கெட்டதா இருக்கணும், இல்லையா?
ம்ம்ம்ம்! அப்படியும் பார்க்கலாம். வேறு விதமாவும் பார்க்கலாம். பயம் என்கிறது ஒரு செய்தி! ஆனா அந்த செய்தியை சரியா படிக்க உணர்வு சார் நுண்ணறிவு – ஈக்யூ- இருக்கணும். இது இருந்தா ஆராய்ந்து எந்த உணர்விலேந்தும் சரியான முடிவுகளை எடுக்கலாம்.  
ஆனா மக்களோ பயத்தை மோசமானதாயும், நிலை குலையச்செய்யறதால் கெட்டதாயும்தான் பார்க்கறாங்க. இன்னும் சிலர் இது ஒரு பலவீனம் என்பாங்க. உண்மையில் இது பாதுகாப்புக்கான நல்ல ஆரோக்கியமான, பயனுள்ள உணர்வே.
ஈக்யூவை பலமான வழியில் பயன்படுத்த அடிப்படை எல்ல உணர்வுகளும் பயனுள்ளவை என்பதை புரிஞ்சு கொள்வது. மத்தவங்க இந்த மாதிரியான பலமான உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது நாம புரிஞ்சு கொள்ள வேண்டியது “அஹா, இது ஏதோ முக்கியமான விஷயம் போலிருக்கு!” பிறகு அந்த உணர்ச்சியை புரிஞ்சுக்கொள்ளப் பார்க்கலாம். மாறுதலை விரும்பறவங்களுக்கு இப்படி நம்முடைய/ மத்தவங்களோட பயத்தை ஒத்திசைவோட பார்க்கக்கத்துகிறது மிகவும் பயனுள்ளதா இருக்கும்! ஏன்னா அது நாம்/ மத்தவங்க நிலமையை எப்படி உணர்ந்து பார்க்கிறாங்கன்னு புரிஞ்சுக்க உதவியா இருக்கும்.
இந்த உணர்ந்து பார்க்கிறது என்கிறதுதான் முக்கியம். பயம் உண்மையை பொருத்தது இல்லை. நம் பார்வை எப்படி இருக்கு என்கிறதை மட்டுமே பொருத்தது. மாற்றத்தை நாம எப்படி பார்க்கிறோம்? மத்தவங்க எப்படி பார்க்கிறாங்க?
பயம் சொல்லும் சேதி: பயம் நம்மை பாதுகாப்பதற்காக இருக்கு. அது ஒரு எச்சரிக்கை: நமக்குப்பிடிச்சது எதுக்கோ ஒரு சின்ன ஆபத்து. சில சமயம் அது என்னன்னு நமக்குத்தெரியாது. அப்ப அது மனக்கலக்கமாயிடும். அல்லது ஒரு பொதுவான மன அழுத்தமாகவோ. இதெல்லாம் கொஞ்சம் பெரிய பிரச்சினைகள்.
பயத்தை தரது எதுன்னு நாம அடையாளம் காண முடிஞ்சாக்க அது ஒரு உள் தெளிவைத்தரும். ஒரு மாற்றும் நிகழும்போது பயத்துக்கு பல காரணிகள் கூட இருக்கலாம். பயத்தை கவனிச்சா அதெல்லாம் என்னன்னு புரியும். அதுக்கு முன் கூட்டியே சில தயாரிப்புகளை செஞ்சுக்க முடியும்.
உதாரணமா:
·         என்ன நடக்குமோன்னு புரியாததன் பயம். இந்த செய்தியை புரிஞ்சுக்கிட்டா அடுத்து என்ன நடக்கும்ன்னு இன்னும் கொஞ்சம் வாய்ப்புக்களை தீவிரமா யோசிக்கலாம்.
·          இந்தக்குழு சரியா வேலை செய்யாது.- செய்தியை சரியா கேட்டோம்ன்னா குழுவில இருக்கிறவங்களோட முதல்லியே பேசிக்கொண்டு ஒத்திசைவை ஏற்படுத்திக்கலாம்.
·         மக்கள் இதை சரியா எடுத்துக்க மாட்டாங்க. – செய்தி சொல்லறது, இன்னும் கொஞ்சம் கவனமா ஆதுரத்தோட அரவணைப்போட செய்தித்தொடர்பை திட்டமிடுப்பா என்கிறது.
அதனால பயத்தை மூடி மறைக்காம அது இருக்கு என்பதை உணர்ந்து கொள்ளணும். மாற்றத்தப்ப வரும் உணர்ச்சிதான் அதுன்னு புரிஞ்சு கொண்டு அதுக்கு செவி சாய்க்க உள்தெளிவு கிட்டும். உள் தெளிவு இருந்தா அடுத்த படிகளை இன்னும் தெளிவா உறுதியா எடுத்து வைக்கலாம்.
பயத்தில் இருந்தது செயலுக்கு
ஒரு விதமா பாத்தா பயம் என்கிறது நம்மோட மூளை “நிச்சயமாப்பா?” ந்னு கேட்கிற ஒரு வழி. பனிச்சறுக்கு சரிவின் மேலே விளிம்பில நிக்கிறவங்க கேட்டுக்கற மாதிரி. பனிச்சறுக்கு விளையாட்டுக்கு தயாரா நிக்கிறவங்களுக்கு முன்னே என்ன அனுபவமோ, அன்னைக்கு எப்படி உணர்கிறாங்களோ அதை பொருத்து கொஞ்சமாவோ அதிகமாவோ பயத்தை உணரலாம். ஆனா சறுக்க ஆரம்பிச்சாச்சுன்னா ஒரே த்ரில்தான்! அல்லது குப்பற விழுந்து மண்ணை – ம்ம்ம்? பனியை -கவ்வலாம். பயம் வரும் கணத்தில் முன்னே நிக்கிறது ஒரே கேள்விதான். நிச்சயமா இதை செய்யப்போறோமா? பல வருட அனுபவம் சொல்லிக்கொடுப்பது என்னன்னா மனசு முடிவு எடுத்துட்டாப்போதும், பயம் குறைஞ்சுடும்! என்ன செய்யப்போறோம்ன்னு தெளிவு இருந்துட்டா பயமே காணாம போயிடும்.
நினைவுல வெச்சுக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா சில சமயம் – முக்கியமா ஆபத்தான காலம்ன்னா- நாம் மத்தவங்களை எப்படி நடந்துக்கறாங்கன்னு பார்க்கிறோம். பயம் என்கிறது தொத்து வியாதி மாதிரி. அது சிலருக்கு இருந்தா அப்படியே பக்கத்துல இருக்கறவங்களுக்கும் பரவிடும். அதனால் தலைவர்கள் முக்கியமா பயத்தை கண்டுபிடிச்சு அதை இருக்கு என்கிறதை உணர்ந்து அதுக்கு தகுந்தாப்போல செயல்லேயும் இறங்கணும், அப்பத்தான் கூட இருக்கறவங்களும் பயப்படாம இருப்பாங்க.
பயம் பயனுள்ளது; அது நம்மை செயலிழக்க விட வேண்டியதில்ல. ஆனா அதுக்கு செவி சாய்க்கணும். அது நமக்கு நல்ல நண்பனா இருக்க முடியும்; ஆனா அது மோசமான எஜமானன்! அதனால அது நமக்கு ஆலோசனை சொல்லட்டும்; அதை அதிகாரம் கொண்டதா ஆக்க வேண்டாம்!

ஜோஷுவா ஃப்ரீட்மென் எழுதிய கட்டுரையை ஒட்டி எழுதப்பட்டது.