Friday 24 July 2015

குழந்தைகளுக்கு உணர்வுசார்நுண்ணறிவு - 8

நான் கத்துக்கிட்ட விதிகள் இதோ!
  1. உணர்ச்சிகளில படிகள் இருக்கு. அடிப்படை உணர்ச்சிகள் சந்தோஷம் துக்கம், பயம், நம்பிக்கை போன்றவை அதிகமாகலாம்; அல்லது குறையலாம். உதாரணமா கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷம் அமைதி. அது இன்னும் கொஞ்சம் அதிகமாக நிறைவு. இன்னும் கொஞ்சம் அதிகமாக மகிழ்ச்சி. இப்படியே இன்பம், பேரின்பம்…. ஆகவே ஒத்தருக்கு எல்லாம் நல்லா போயிட்டு இருக்கு என்பதால அமைதியா இருந்தா, ஒரு நல்ல செய்தி வந்ததுன்னா கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சி அதிகமாகி நிறைவு வரும். இன்னொரு நல்ல செய்தி வந்தா மகிழ்ச்சி… இப்படியே … புரியுது இல்லையா? இது நிறத்தட்டுல பலவித வண்ணங்கள் பல நிற ஆழத்தில இருக்கிறா மாதிரி!


  1. சாதாரணமா ஒண்ணுக்கு மேற்பட்ட உணர்ச்சிகள் இருக்கும். பரிட்சைக்கு படிக்கலேன்னு வீட்ல அம்மா திட்டினாங்க; அதனால் கொஞ்சம் வருத்தம். பரிட்சைய பத்திய பயம். பரிட்சை கூடத்தில ரொம்ப நாள் கழிச்சு பாத்த நண்பனைக்குறித்து சந்தோஷம். எல்லாமே கலந்து ஒரே நேரத்துல இருக்க முடியும்! அந்த மாதிரி சமயத்துல நம்மோட உணர்ச்சிகளைக் குறித்து என்னன்னு சொல்ல முடியும்? சில சமயம் ரெண்டு மூணு உணர்ச்சிகள் சேர்ந்த கலவைக்கு ஒரு பேர் இருக்கலாம். சிலது நாம நினைச்ச படி நடக்காம போயிட்டா கொஞ்சம் கோபம் இருக்கும். அதே சமயம் வருத்தமிருக்கும். இதை ஏமாற்றம் என்கலாம்.


  1. உணர்ச்சிகள் நம்ம கவனத்தை ஈர்க்குது. அதுகளோட வேலையே இதுதான். நமக்கு உள்ளேயோ வெளியிலோ ஏதும் நடக்கும்போது இந்த உணர்ச்சிகள் எழும். உதாரணமா நம்மோட ஒரு தேர்வு தப்பா போச்சுன்னா வருத்தமா இருக்கும். “ஹேய்! தோ பாரு, நீ பண்ணது தப்பு”ன்னு இந்த உணர்ச்சி நமக்கு பாடம் சொல்லித்தருது. ஏதேனும் புதுசாவோ அசாதாரணமாவோ நடந்தா “ஹோய், அதோ பாரு, புதுசா ஏதோ நடக்குது; என்னன்னு கத்துக்கோ” ந்னு இது கூவுகிறது.

No comments:

Post a Comment